ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எது அழகு ?

பூ விற்று முடித்த பூக்காரி
அந்த பூக்கூடையில் -
தனக்கென கொஞ்சம் பூவையும்,
தன குழந்தைக்கென கொஞ்சம் பலகாரமும்
வாங்கி வைத்து கொண்டு வீடு போகும் பொழுது
பூப்பாலே ஒரு புன்னகை ..
அந்த புன்னகை அழகு !!!

தாய் கொடுத்த பலகாரத்தை
தன பிஞ்சு கைகளில் வைத்து
சிந்தி சிதறி வாயெல்லாம் அப்பியவாரே
அந்த குழந்தை சாப்பிடுமே
அது மொத்தமாய் அழகு !!!

சிந்திய இனிப்பை
சிற்றெறும்புகள் கூட்டமாய் வந்து எடுத்துக்  கொண்டு
வெள்ளை சுவரில் நேர்கோட்டில்
வரிசையாய் ஏறுமே
அந்த வரிசையே அழகு !!

அலுப்பு தீர கைகால் அலம்பி
முகம் கழுவி - பொலிவு கூட்டி
தலை வாரி, பொட்டு வைத்து
மீதம் கொண்டு வந்த பூவை
தலையில் வைத்து கொண்டவாரே
நடந்து வருவாளே ஒரு நடை
அந்த நடையழகு !!!

வந்தவள் தன் குழந்தையை பார்த்து
"என்னடி ராஜாத்தி !! என்ன பண்றீங்க ??
சாப்பிடுறீங்களா ??
அம்மாக்கு கொஞ்சம் கொடுங்கம்மா "
என்று கேட்டவாறே
அந்த பிஞ்சு கைகளால் ஊட்டச்சொல்லி
கொஞ்சமாய் உண்ணுவாளே
அந்த ஊட்டலும் உண்ணலும் பேரழகு !!

இது எதையும்விட  அழகாய்
நான் எதையும்  பார்க்கவில்லை !!
பார்த்தவர்கள் இருந்தால்
அந்த குருடர்களுக்கு
பரிகாசங்களோடு என் பரிதாபங்களை
பரிசாய் அளிக்கிறேன் !!!

-ல.கி.ரா ;)

வியாழன், 19 மே, 2016

புதிய விடியலிது


"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"


பாரதியின் சொல்லுக்கு நேர் எதிராக -
வயிற்று பசி ஆற்றாமல் தர்க்கமும், கொள்கையும் எம்மக்கள் காதில் விழாது என்ற ஒரு தோழியின் சொல் ஆயிரத்தில் ஒரு சொல் 😒 அதுவே இன்றைய யதார்த்தம்!!!

திராவிடம், ஈழம், தமிழ், 2ஜி, மீடியா வெளிச்சம், குடும்பம், தற்பெருமை,  தன்-பிரச்சினை, சாதி-மதம் இதை வைத்தே அரசியல் நடக்கிறது பல கட்சிகளில்...
அவர்கள் அரசியல் மக்களை சென்றடைவது நடவாத
காரியம் என்பதே தமிழக தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தும்
கசப்பான உண்மை!!

தோற்ற தலைவர்களும், தொன்டர்களும் தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பதை விட்டு விட்டு மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்வியலை உணருங்கள்...
முதலில் மாற வேண்டியது நீங்கள்தான் அரசியல் தலைவர்களே!!!

மாற்றம் என்னவேன்று நீங்கள் கண்டுபிடியுங்கள் பின் மக்களிடம் அதை எப்படி கொண்டுசெல்வதேன சிந்தியுங்கள்!!  செயல்படுங்கள்!!

பண படை பலமிருந்தும் நாற்காலியைப் பிடிக்க இயலாமல் இருக்கும் 60 வயது இளைஞர் முயலும் போது....
60 ஆண்டு அரசியலை கரைத்துக் குடித்து, 97 வயதில் நாற்காலியில் அமரராக ஒருவர் முயலும் போது...
மொத்தமே 20 வருட அரசியல் அனுபவமில்லாத ஒருவர் 2 வருட உழைப்பில் பிரதமராக ஆகும்பொழுது...
அரிசியில் ஆரம்பித்து இலவசத்தில் மக்களை 10 வருடங்கள் கட்டுக்குள் வைத்திருக்க ஒருவரால் முடியும் பொழுது...
இந்த நாட்டில் இந்த மக்களால் எதுவும் சாத்தியமே!!

நோக்கத்தை சாதி, மொழி, இனமென குறுக்காதீர்... யாதையும் ஊராக்கி யாவர் சொல்வதையும் காதில் அல்ல மனதில் இருத்துங்கள்!!

நோக்கம் மக்கள் சேவையாக இருக்கும் பொழுது, தேர்தல்கள் மைல்கற்களாக மட்டுமே இருக்க வேண்டும்,
நாற்காலி ஒரு கருவி மட்டுமே அது மட்டுமே ஒரு கருவியல்ல..

சமூக அரசியல் கட்டமைப்பே முற்றிலும் கோனலாக இருக்குமிடத்தில் மக்களை குறை கூறாமல், பழி போடாமல்....
தொடர்ந்து அவர்களை தரம் உயர்த்துவதெப்படி என சிந்தியுங்கள்!!

மக்களின் அறியாமையை போக்க உழையுங்கள்..
வெள்ளத்தில் மீட்பராய் தெருவில் இறங்கி கைகொடுத்து..... தேர்தல் சனநாயகத்தில் நம்பிக்கை இல்லாது தள்ளி நின்ற அந்த இளைஞர்களை மீண்டும் தெருவுக்கு கொண்டுவருவதெப்படி என சிந்தியுங்கள்!!!
உங்களை விட மக்களை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும், மக்களிடம் ஒரு விசயத்தை எப்படி கொண்டு செல்வதேன அவர்களுக்கு தெரியும்!!!

நேற்று அஸ்தமனம் முடிந்த கதை, இன்றைய விடியலே நம் நம்பிக்கை!!!
வாருங்கள் தலைவர்களே!!!
இன்னும் விரைவாக!! இன்னும் பலமாக!! இன்னும் இன்னும் இன்னும் புதிதாக!!
புதியதோர் உலகம் செய்வோம் வாருங்கள்!!!

-லகி.ரா 

சனி, 22 ஜூன், 2013

தகப்பன்சாமி

"அப்பா.. நல்லா இருக்கீங்களா.. சாப்பிட்டிங்களா.. உடம்ப பார்த்துகோங்கப்பா"
அப்புறம்...... தந்தையர் தின வாழ்த்துக்கள்'ப்பா ..
ஒரு சின்ன சிரிப்பு சத்தம் கேட்டது எதிர்முனையில்..
இவ்வளவு தான் தந்தையார் தினத்தன்று என் தந்தையிடம் நான் பேசியது..
சிறு பிராயத்தில் எதிரில் நிற்கவே பயந்து ஒளியும் நான் இன்று இவ்வளவு பேசியதே என்னை பொறுத்தவரை பெரிய வெற்றி :)


தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

அப்பா என்றால் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு ??

ஒரு கம்பீரமான உருவம், கணீர் குரல், கட்டையில் செய்த மாதிரி ஒரு உடல், கண்டிப்பு, பயம் கலந்த மரியாதை மொத்தத்தில் நாம் அறிந்த முதல் 'சூப்பர் மென்' நம் அப்பாக்களாகவே இருப்பார்கள்...

என்னுடைய 'சூப்பர் மென்'
அனால் அம்மாவின் மகத்துவம் போற்றப்படும் அளவுக்கு அப்பாக்கள்  கண்டு கொள்ளபடுவதே இல்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு..

முழு முதல் காரணம் அப்பாக்கள் கண்டிக்கும் பொழுது அரவணைக்கும் அம்மாக்கள் பிள்ளைகள் மனதுக்கு மிகவும் நெருங்கி போய்விடுகின்றனர்... 

நம் அப்பாக்கள் எல்லோரும் என் பொதுவாக கண்டிப்பான அப்பக்களாகவே இருகின்றனர் என எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா !!!           

நான் அறிந்த வரையில் அவர்கள் செய்த தவறுகளை தம் பிள்ளைகளும் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

அப்பாக்கள் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வாழ்கையில் வேறு யாரும் நமக்கு கற்று கொடுப்பது கிடையாது. ஆனால் இந்த வாழ்க்கை தேர்வில் நாமெல்லாம் வெற்றி பெரும் வரை அப்பாக்களுக்கு மட்டும் உழைப்பிலிருந்து விடுப்பே கிடையாது.     

அப்பாக்கள் நமக்காக விட்டுக்கொடுத்தும் ஏராளம், போடும் சட்டையிலிருந்து, சாப்பிடும் சாப்பாடு வரை நமக்கு எல்லாம் சரியாய் கிடைக்கிறதா எனப் பார்த்து பார்த்து செய்யும் அப்பாக்கள் தம்மை பற்றி சிந்திப்பதே கிடையாது. 

பண்டிகை வந்து விட்டால் அம்மாக்கு பட்டு, பிள்ளைகளுக்கு நல்ல சட்டை பாண்டு ஜட்டி பனியன் எல்லாம் எடுத்த பிறகு எவ்வளவு மிச்சமோ அதுதான் அப்பாவின் துணி மணிகளுக்காண பட்ஜெட்டு.

ஒரு ஒரு வருடமும் பள்ளி திறக்கும் பொழுது அப்பாக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மொத்த சம்பளமும் வரவு செலவுக்கனே சரியாய் இருக்கும் பொழுது தீடீரென வரும் புத்தகச் செலவு, சீருடை செலவு, காலணிகளுக்கான செலவு, புத்தகப்பைக்கான செலவு....

எனக்கு சலதோஷம் பிடித்தால் கூட மருத்துவரிடம் காண்பிக்கும் அப்பா, அவரது உடம்பை பற்றி இப்பொழுது கூட அவ்வளவு சட்டை செய்தது கிடையாது  

என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தாராளம்.

முதலும் முற்றுமான தமிழை எனக்கு கற்று கொடுத்தது என் அப்பாதான். அப்பா அந்த வட்டத்தில் சிறந்த பேச்சாளார்.அவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் அவருடைய மகன் என்பதற்காக எனக்கு பேச்சாற்றல் உண்டா இல்லையா என்று கேட்காமலேயே நவபாரத் பள்ளியில்  பேச்சு போட்டியில் பெயர் எழுதி கொள்ளும் அளவிற்கு பிரபலம்.          
பயத்தோடு என் அப்பாவிடம் இதை சொன்னேன், பேச வேண்டியதை எழுதி கொடுத்து பேச சொல்லிகொடுத்து தைரியம் தந்து முதல் பரிசு வாங்க வைத்த என் தந்தையை நான் என்னவென்று சொல்லுவது...
அரசியல் சொல்லிகொடுத்து , நாட்டின் வரலாறு சொல்லி கொடுத்தது , செய்தி தாள் படிக்க வைத்தது...

கருங்குளம் குளத்தில் என்னை முதுகில் சுமந்து நீச்சல் கற்று கொடுத்தது..

என் தம்பியை பார்த்து 'போடா  வெண்ணை' என்று சொன்னதற்கு அப்பா அடித்த அடி என்னை இன்று வரை கேட்ட வார்த்தைகளை கேட்டாலே நடுங்க வைப்பது...

அன்னப்பா பள்ளியில் பலான புத்தகம் படிச்சு மாட்டிக் கொண்ட பொழுது 'உங்க பையன்தான் இங்க எல்லாரையும் கெடுக்கிறது' என சொன்ன வாத்தியாரிடம் ..
'என் பையன் தப்பு செஞ்சத என் கிட்ட ஒத்துகிட்டான், ஆனா அவன் யாரையும் கெடுத்திருக்க மாட்டான்" திருப்பி சண்டை போட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் வைத்த எந்த தேர்விலும் ரேங்க் எடுக்காத என்னை நாலு மணிக்கு எழுப்பி விட்டு மிதிவண்டியில் இருவருமாக சென்று தேநீரும் வடையும் வாங்கி கொடுத்து கூடவே உட்கார்ந்து படிக்க வைத்து 80 சதவீதம் வாங்க வைத்தது..

கேம்பஸில் வேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு போன பொழுது வாசலிலேயே காத்திருந்து வரவேற்றது..

இதை எல்லாமே செய்துவிட்டு இன்னும் உழைத்துகொண்டே இருக்கும் என் அப்பா..
இன்னும் எதை எதை எனக்கு கொடுத்து தீரா கடனாளி ஆக்கப்போகிறாரோ தெரியவில்லை.. 

என் அப்பா செய்ததை எல்லாம் திருப்பி செய்யா காலமும் களமும் எனக்கு வாய்ப்பளிக்குமா என்று தெரியவில்லை..

அனால் இந்த தருணம் நான் என் அப்பாவிற்கு சொல்ல நினைப்பது எல்லாம்  "உழைச்சது போதும் ஓய்வெடுக்கலாம் வாங்கப்பா" என்கிற வார்த்தைகளைத்தான்.     


மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்.
  
-ல.கி.ரா 

*குறளுக்கான விளக்கம் தேடுவோர் கூகுளிட வேண்டியது  "திருக்குறள் - அறத்துப்பால் - மக்கட்பேறு" 

செவ்வாய், 28 மே, 2013

சினிமா காமம் காப்பி


பொதுவாக சினிமாவில் நடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் உண்மையாக என்ன வயது இருக்கும் ??

20 இல் இருந்து 25 , 30, 40, 50 வரை இருக்கும் ???

எங்கள் உரையாடல் 20 - 25 வயதே ஆன நாயகனையும் நாயகியையும் பற்றியது.

நமக்கும் இப்பொழுது அதே வயதுதான் 

நினைத்து பாருங்கள் அந்த நாயகனின் இடத்தில் நானோ நீங்களோ இருந்தால் ..

நீங்கள் நாயகனாக நடிக்கும் ஒரு சினிமா ;) 
நாயகி உங்களுக்கு மிக அருகில் வருகிறாள்,
எவ்வளவு அருகில் என்றால் அவளது மூச்சு காற்று உங்கள் முகத்தில் படும் அளவு நெருங்கி வருகிறாள் 
வந்தவள் உங்கள் கையை பிடித்து செல்லமாக உங்கள் பெயரை உச்சரிக்கிறாள்

உங்களுக்குள் என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் அந்த நொடியில்...
      
அது கிளர்ச்சியா, காமமா, ??

இதெல்லாம் நடந்தா நல்லாத்தானிருக்கும், அதை பற்றி பேச என்ன இருக்கிறது இப்பொழுது என்கிறிர்களா ?

இந்த சினிமாதான் நமக்கு பலவித உணர்சிகளை அறிமுகப்படுதியதாக இருக்கும்.
காதல், காமம், களவு, நட்பு, கோபம், ஏக்கம், பகட்டு.....
ஏன் வீரம், துரோகம், என பல பல புரியாத உணர்வுகளை பற்றி அரைகுறையாக பாடம் எடுத்தது இந்த சினிமாவாகத்தான் இருக்கும்..

நகரத்தையே பார்க்காத கிராமத்தானுக்கு நகரத்தின் நெளிவு சுளிவுகளையும்,
கிராமத்தை வெறுக்கும் நகரவாசிக்கு கிராமத்தின் ஈரத்தையும், மண் வாசனையையும், அந்த மனிதர்களின் வாஞ்சையும்,
அறிமுகபடுத்த சினிமாவை தவிர எந்த ஊடகத்தாலும் முடியாது..
   
வாசிப்பு பழக்கமே இல்லாத இந்த புதிய தலைமுறைக்கு உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது இந்த சினிமாதான். 

இந்த பொழுதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் இருந்தாலும் எதிர் வரும் காலத்தில் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரும் நடுநிலையான ஊடகமாக இருக்கப் போவது சினிமாதான்

ஒரு துணிக்கடையின் பின்னால் எவ்வளவு கொடுமைகள் அரங்கேறுகின்றன என்ற காட்டியது 'அங்காடி தெரு'..

சிறு வாண்டுகளின் உலகத்தை கொண்டாடியது 'பசங்க'..

காவல்துறையின் இருண்ட இன்னொரு பக்கத்தை புரட்டி பயமுறுத்தியது 'மௌனகுரு'..

பெண்களுக்கு எதிரான இளைய சமுகத்தின் பார்வையை கல் நெஞ்சமும் உருகும் வழக்காக தொடுத்தது 'வழக்கு என் 18/9'..

'எய்ட்ஸ்' நோயின் மூலத்தையும் அதன் பாதிப்புகளின் கொடூரத்தையும் சொன்னது 'மிருகம்'..

பிச்சை என்பது இரக்கமே இல்லாத கயவர்களால் நேர்த்தியாக ஒருங்கிணைந்து நடத்தப்படும் கொடுந்தொழில் என உணர்த்தியது 'நான் கடவுள்'..  

பேய் பயத்தை அடி வயிற்றில் இருந்து கிளறி உறைய வைத்து பின் எதிர்பார்க்காத நிகழ்வுளால் ஆச்சரியடுத்திய 'பிட்சா'..

இந்த பட்டியல்லுக்கு எல்லையே கிடையாது.. 

சுதந்திரமாக கருத்தை சொல்ல ஒரே வழி சினிமாதான்.

ஒரே கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் படமெடுக்க சினிமாவால் தான் முடியும்.

இந்த சினிமா பல புதிய உயரங்களை எட்டுவது ரசிகர்கள் புது முயற்சிகளுக்கு  கொடுக்கும் ஆதரவிலேதான்  இருக்கிறது.

முயற்சிகளை ஆதரிக்க தயாரா நாம் ??    
இல்லை மசாலாக்களே போதுமா நமக்கு ??

-ல.கி.ரா 

(பேரின்பவிலாஸில் சன் தொலைகாட்சியில் காதலர் தினம் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது உதித்த சிந்தனை இது) 

நக்சல் - விளக்கம் கூறு?

நக்சல் என்றால் என்னவென்று நண்பனை கேட்டேன் ?

-கோ படத்துல வருமே அதுதான் என்றான் 

இன்னொருவன் யூனியன் மாதிரி ஒரு விஷயம் என்றான் 

இன்னொருவன் கமுயூனிஸ்ட் என்றான் 

ஒருவர் வேலை இல்லா பட்டதாரிகள் ஆயுதம் ஏந்தி போராடும் போராட்டம் என்றார்..
எதோ விளங்குகிற மாதிரி இருந்தது ? விவரித்து சொல்ளுங்கள் என்றேன் !!

கனிம வளங்களை கொள்ளயடிப்பதை ஆயுதம் போராட்டம் மூலம் எதிர்ப்பது என்றார் ?
விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுக்கும் அமைப்பு என்றார் ?

நேபாளத்தில் இருந்து பரவிய சீனாவின் கைக்கூலிகள்  - இது ஒரு காங்கிரஸ்காரரின் கருத்து !!

இது சட்டத்திற்கு உட்பட்டதா என்று கேட்டேன் ?

இல்லை என்று இருவரிடமும் இருந்து பதில் வந்தது 

இது தீவிரவாதமா என்றேன் ?

இல்லை என்றே பதில் வந்தது 

ஜம்மு கஷ்மீரை பாதுகாக்கும் ராணுவம் இங்கே என் போகவில்லை என்று கேட்டேன் ?

இது மக்கள் வாழும் பகுதி என்றார்கள் அதனால் ராணுவம் போகாது என்றார்கள் 

அப்படி என்றால்  கஷ்மீரில் மக்கள் வாழவில்லையா ??

பதில் இல்லை இருவரிடமும் 

அவர்கள் போராடும் விஷயம் நியாயமானது என்றால் அவர்களை போராடவைத்த உண்மையான குற்றவாளிகள் யார் ?

அவர்கள் போராடும் முறை தவறு என்றால் அதை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உண்மையான குற்றவாளிகள் யார் ?

சத்தமே இல்லை இருவரிடமும்..

விளக்கம் வேண்டிப்  போன எனக்கு  
பெரும் குழப்பமே எஞ்சி நிற்கிறது..

உங்களுக்கு எதாவது விளங்கினால் சொல்லுங்கள் 

குழப்பத்துடன்,
-ல.கி.ரா   

கொசுறு: இது வங்காளத்தில் உள்ள 'நக்சல்பாரி' என்ற கிராமத்தில் இருந்து தொடங்கப்பட்டதால் நக்சலைட் இயக்கம் என்று அலைக்கபடுவதாக விக்கி கூறுகிறது    

திங்கள், 27 மே, 2013

குருட்டுதனமான முட்டாள்தனம்

ஆத்திசூடி:  சகர வருக்கம் 

"சூது விரும்பேல்"

குறள்: நடுவு நிலைமை - என் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க் கனி. 



இந்த ஐ.பி.எல் 6 தொடர் விளையாட்டின் மேல் எனக்கு இருந்த பல அடிப்படைகளை நம்பிக்கைகளை தகர்த்தெறிந்துவிட்டது.

பினாமியை வைத்து சூதாடும் அணியின் உரிமையாளர், மருமகனை காப்பாற்றும் சங்கத் தலைவராகிய மாமனார்,
கம்பெனி நடத்தி சூதாடிய வீரர்கள்,
எதிர்பார்த்த நேர்மையில்லை, வாய்புகள் இல்லை, லாபமில்லை எனகூறி  வெளியேறிய சஹாரா புனே அணி,

இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த எல்லா தவறுகளையும் ஒரு செய்தியாய் மட்டுமே பார்க்கும் ரசிகர்கள்...

தரம் தாழ்ந்தது விளையாட்டில் மட்டுமில்லை , ரசிகர்களின் எண்ணத்திலும்தான்..

இது சென்னைக்கு எதிராக வடக்கத்தியர்கள் நடத்தும் சதி என்பதும்..
சூதாட்டமும், பொய்யாட்டமும் (ஸ்ரீசாந்த் ஆடியது) வேறு வேறு என்று சொல்வதும்..
சம்பதிமில்லாமல் i support msd , i support raina என்று சொல்வதும்..

குருட்டுதனமான முட்டாள்தனம் ..

லஞ்சம் எப்படி ஊழலுக்கு வழி வகுக்கிறதோ  அப்படிதான் 
சூதாட்டம் தான் வீரர்களை பொய்யாட்டம்ஆட வைக்கிறது,

இங்கு ரசிர்கள் இரு வகை படுகின்றனர்..
பிரச்சினை என்னவென்றே அறிய விரும்பாதவர்கள் ஒரு வகை,
அறிந்து கொண்டே அறியாதது போல் நடிப்பவர்கள் இன்னொரு வகை..

தவறு நடந்ததாகவே இருக்கட்டும், அதை முடி மறைக்க ரசிகர்கள் ஏன்  முயலுகிறார்கள் எனத் தெரியவில்லை எனக்கு,
மாட்டிக் கொண்ட மெய்யப்பன் உங்கள் சித்தப்பனா இல்லை மாமனா ?

சென்னைக்காரர்கள் நேர்மையான விளையாட்டுக்கு பெயர் போனவர்கள் என்ற பெயரை கெடுப்பதும்..
இல்லை எந்த தவறையும் சகித்து கொள்ளாதவர்கள் என்று பெயரெடுப்பதும் ரசிகர்கள் நம் கைகளில்தான் உள்ளது..

இது சென்னைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதுபவர்கள், அதனை சரியான முறையில் களைந்தெறிய முற்படாமல் மறைக்க முயல்வது இங்கு அரசியல்வாதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது..

ஐந்து வருடங்களாக நமது நேரத்தையும் , உழைப்பையும் மிக முக்கியமாக நமது செல்வத்தையும் விழலுக்கு இளைத்த நீராக்கிவிட்டார்களே என்று கோபம் வரவில்லையா ??

நம்மை உணர்சிவயப்படுத்தி பணம் பறித்துவிட்டார்களே என்ற ஏமாற்றம் இல்லையா ?

இது எதுவுமே இல்லை எனக்கு என்று சொன்னால்..

தரம் தாழ்ந்தது விளையாட்டில் மட்டுமில்லை !!!
உங்கள் எண்ணத்திலும்தான் !!!

ஆழ்ந்த வருத்ததுடனும் கடும் கோபத்துடனும் 

-ல.கி.ரா 


 
 

ஞாயிறு, 26 மே, 2013

பி.சி.சி.ஐ'யின் - ஐ.பி.எல் - கிரிக்கெட்டை பிடித்த சாபக்கேடு

சஹாராவின் புனே அணி அழுகாத குறையாக தனக்கு நடந்த கொடுமைகளையும், பி.சி.சி.ஐ செய்த பித்தலாட்டங்களையும் தெரியபடுத்தி இந்த விளையாட்டில் நேர்மைக்கும், ஒளிவு மறைவு இல்லாத செயல்பாட்டுக்கும் துளி கூட இடம்கிடையாது என்பதை வெளிக்காட்டியுள்ளது. 
ஐ.பி.எல் விளையாட்டில் இருந்து விலகியது மட்டுமில்லாமல், 
இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை எந்த விதத்திலும் ஆதரிக்க போவது இல்லை என்றும் அறிவித்துள்ளது. 

ஐ.பி.எல்'லின்  மேல் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள ரசிகர்கள் ஏன் இந்த பி.சி.சி.ஐ செயல்பாடுகள் அனைத்தும் இரும்பு திரை போட்டு பாதுகாக்கப்படுகின்றன என்பதை சிந்தித்து பார்க்க மறுக்கிறார்கள்.

சூதாட்டம் என்பது ஒரு சில வீரர்கள் மட்டுமே ஈடுபட்டிருப்பார்கள் என்பது மிக பெரிய நகைச்சுவை, ஏனென்றால் அசாருதீன் , ஜடேஜா போன்ற பாரம்பரியமிக்க வீரர்களை உலகிற்கு அளித்தது நமது இந்திய கிரிக்கெட்.

வீரர்கள் ஏலம் எடுப்பதில் முறைகேடு, அணிகளை ஏலம் எடுப்பதில் முறைகேடு, போட்டி நடத்துவதில் முறைகேடு, உடல் தகுதி இல்லாத வீரர்களை விளையாட வைத்து நோகடித்தது, போட்டி முடிந்தவுடன் வீரர்களை அழகிகலோடு ஆட்டம் போட வைத்தது, போட்டியில் சூதாட்டம் ஆடியது இது தான் ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கு செய்த நன்மைகள்.  

எனக்கு ரெண்டு மாசம் பொழுது போகணும் யார் எப்படி போன எனக்கு என்ன என்று யோசிப்பவர்கள் விளையாட்டின் உண்மையான ரசிகர்களாய் இருக்க முடியாது.

இதுல ஊர்ப்பற்று , உலகப்பற்று என்று சொல்லி அடுத்தவர்களோடு மாரடிப்பவர்களை என்ன சொல்லி திருத்துவது என்று தெரியவில்லை...
எது எப்படியோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்..

துணை கேள்வி: இந்த ஐ.பி.எல் சூதை கவ்வ போவது மும்பை அம்பானிகள் அல்லது தாத்தாவின் பேரன்களா ??


இப்படிக்கு விளையாட்டின் மேல் அக்கறையுள்ள ஒரு அப்பாவி ரசிகன்

- ல.கி.ரா  
(இது மே 22ஆம் தேதி என் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தன்னிலை அறிக்கை )