"அப்பா.. நல்லா இருக்கீங்களா.. சாப்பிட்டிங்களா.. உடம்ப பார்த்துகோங்கப்பா"
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
அனால் அம்மாவின் மகத்துவம் போற்றப்படும் அளவுக்கு அப்பாக்கள் கண்டு கொள்ளபடுவதே இல்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு..
மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்.
அப்புறம்...... தந்தையர் தின வாழ்த்துக்கள்'ப்பா ..
ஒரு சின்ன சிரிப்பு சத்தம் கேட்டது எதிர்முனையில்..
இவ்வளவு தான் தந்தையார் தினத்தன்று என் தந்தையிடம் நான் பேசியது..
சிறு பிராயத்தில் எதிரில் நிற்கவே பயந்து ஒளியும் நான் இன்று இவ்வளவு பேசியதே என்னை பொறுத்தவரை பெரிய வெற்றி :)
அப்பா என்றால் என்ன ஞாபகம் வருகிறது உங்களுக்கு ??
ஒரு கம்பீரமான உருவம், கணீர் குரல், கட்டையில் செய்த மாதிரி ஒரு உடல், கண்டிப்பு, பயம் கலந்த மரியாதை மொத்தத்தில் நாம் அறிந்த முதல் 'சூப்பர் மென்' நம் அப்பாக்களாகவே இருப்பார்கள்...
![]() |
| என்னுடைய 'சூப்பர் மென்' |
முழு முதல் காரணம் அப்பாக்கள் கண்டிக்கும் பொழுது அரவணைக்கும் அம்மாக்கள் பிள்ளைகள் மனதுக்கு மிகவும் நெருங்கி போய்விடுகின்றனர்...
நம் அப்பாக்கள் எல்லோரும் என் பொதுவாக கண்டிப்பான அப்பக்களாகவே இருகின்றனர் என எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா !!!
நான் அறிந்த வரையில் அவர்கள் செய்த தவறுகளை தம் பிள்ளைகளும் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
அப்பாக்கள் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு வாழ்கையில் வேறு யாரும் நமக்கு கற்று கொடுப்பது கிடையாது. ஆனால் இந்த வாழ்க்கை தேர்வில் நாமெல்லாம் வெற்றி பெரும் வரை அப்பாக்களுக்கு மட்டும் உழைப்பிலிருந்து விடுப்பே கிடையாது.
அப்பாக்கள் நமக்காக விட்டுக்கொடுத்தும் ஏராளம், போடும் சட்டையிலிருந்து, சாப்பிடும் சாப்பாடு வரை நமக்கு எல்லாம் சரியாய் கிடைக்கிறதா எனப் பார்த்து பார்த்து செய்யும் அப்பாக்கள் தம்மை பற்றி சிந்திப்பதே கிடையாது.
பண்டிகை வந்து விட்டால் அம்மாக்கு பட்டு, பிள்ளைகளுக்கு நல்ல சட்டை பாண்டு ஜட்டி பனியன் எல்லாம் எடுத்த பிறகு எவ்வளவு மிச்சமோ அதுதான் அப்பாவின் துணி மணிகளுக்காண பட்ஜெட்டு.
ஒரு ஒரு வருடமும் பள்ளி திறக்கும் பொழுது அப்பாக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மொத்த சம்பளமும் வரவு செலவுக்கனே சரியாய் இருக்கும் பொழுது தீடீரென வரும் புத்தகச் செலவு, சீருடை செலவு, காலணிகளுக்கான செலவு, புத்தகப்பைக்கான செலவு....
எனக்கு சலதோஷம் பிடித்தால் கூட மருத்துவரிடம் காண்பிக்கும் அப்பா, அவரது உடம்பை பற்றி இப்பொழுது கூட அவ்வளவு சட்டை செய்தது கிடையாது
என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தாராளம்.
முதலும் முற்றுமான தமிழை எனக்கு கற்று கொடுத்தது என் அப்பாதான். அப்பா அந்த வட்டத்தில் சிறந்த பேச்சாளார்.அவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் அவருடைய மகன் என்பதற்காக எனக்கு பேச்சாற்றல் உண்டா இல்லையா என்று கேட்காமலேயே நவபாரத் பள்ளியில் பேச்சு போட்டியில் பெயர் எழுதி கொள்ளும் அளவிற்கு பிரபலம்.
பயத்தோடு என் அப்பாவிடம் இதை சொன்னேன், பேச வேண்டியதை எழுதி கொடுத்து பேச சொல்லிகொடுத்து தைரியம் தந்து முதல் பரிசு வாங்க வைத்த என் தந்தையை நான் என்னவென்று சொல்லுவது...
அரசியல் சொல்லிகொடுத்து , நாட்டின் வரலாறு சொல்லி கொடுத்தது , செய்தி தாள் படிக்க வைத்தது...
கருங்குளம் குளத்தில் என்னை முதுகில் சுமந்து நீச்சல் கற்று கொடுத்தது..
என் தம்பியை பார்த்து 'போடா வெண்ணை' என்று சொன்னதற்கு அப்பா அடித்த அடி என்னை இன்று வரை கேட்ட வார்த்தைகளை கேட்டாலே நடுங்க வைப்பது...
அன்னப்பா பள்ளியில் பலான புத்தகம் படிச்சு மாட்டிக் கொண்ட பொழுது 'உங்க பையன்தான் இங்க எல்லாரையும் கெடுக்கிறது' என சொன்ன வாத்தியாரிடம் ..
'என் பையன் தப்பு செஞ்சத என் கிட்ட ஒத்துகிட்டான், ஆனா அவன் யாரையும் கெடுத்திருக்க மாட்டான்" திருப்பி சண்டை போட்டது.
பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் வைத்த எந்த தேர்விலும் ரேங்க் எடுக்காத என்னை நாலு மணிக்கு எழுப்பி விட்டு மிதிவண்டியில் இருவருமாக சென்று தேநீரும் வடையும் வாங்கி கொடுத்து கூடவே உட்கார்ந்து படிக்க வைத்து 80 சதவீதம் வாங்க வைத்தது..
கேம்பஸில் வேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு போன பொழுது வாசலிலேயே காத்திருந்து வரவேற்றது..
இதை எல்லாமே செய்துவிட்டு இன்னும் உழைத்துகொண்டே இருக்கும் என் அப்பா..
இன்னும் எதை எதை எனக்கு கொடுத்து தீரா கடனாளி ஆக்கப்போகிறாரோ தெரியவில்லை..
என் அப்பா செய்ததை எல்லாம் திருப்பி செய்யா காலமும் களமும் எனக்கு வாய்ப்பளிக்குமா என்று தெரியவில்லை..
அனால் இந்த தருணம் நான் என் அப்பாவிற்கு சொல்ல நினைப்பது எல்லாம் "உழைச்சது போதும் ஓய்வெடுக்கலாம் வாங்கப்பா" என்கிற வார்த்தைகளைத்தான்.
-ல.கி.ரா
*குறளுக்கான விளக்கம் தேடுவோர் கூகுளிட வேண்டியது "திருக்குறள் - அறத்துப்பால் - மக்கட்பேறு"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக